Saturday, June 4, 2011

அப்பாவும் நானும் !!

ஏதோ ஒரு சிந்தனையில் இருக்கும் போது அப்பாவின் ஞாபகம் வந்தது.இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு சிற்றுண்டி சாலையில்  பரோட்டா சாப்பிடும்  போது என் எதிரில் அமர்ந்திருந்த ஒரு சிறுவனையும் அவன் அப்பாவையும் பார்த்த போது என் நினைவுகள் அப்பாவை நோக்கி  நகர்ந்தது. எழுத்துகளும் ஊடகங்களும் தாய்மையை கொண்டாடும் அளவு தந்தையின் உலகத்தை கொண்டாடுவதில்லை என்பது என் கருத்து. அம்மாவின் அன்பு அளப்பரியது ஒத்து கொள்ள தான் வேண்டும் ஆனால் அதற்கு சற்றும் குறைந்ததல்ல அப்பாவின் பாசமும்!அப்பாவை பார்த்து அவர் சொல்லி கொடுக்கமலே ஏகலைவர்களாய் நாம் கற்று கொண்டது ஏராளம்.  எண்ணி பார்த்தால் நான் என் தந்தையிடம் கற்ற விசயங்களை சொல்லி கொடுக்க பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும்  நூறு ஆண்டுகள் வேண்டும். வண்டி ஓட்டும் விதம் முதல் நான் சாப்பிடும் விதம் வரை என் வாழ்வின் ஒவ்வ்வோர்  அசைவிலும்  என் தந்தையின் நிழல்  இருப்பதை  உணர்கிறேன். ஒரு மகனை  குழந்தையாய் பார்ப்பது  தாய் என்றால் அவனை  ஓர் மனிதனாய் பார்ப்பது அவன்  தந்தை தான்-எல்லாம் தெரிந்த தணை  யானையாய்  தாழ்த்தி பாகனாய் ஒன்றும் தெரியாத தன் குழந்தையை உயர்த்தும்  பேரன்பு  தந்தையுடையது. 
அம்மாவிற்கும் எனக்குமான உறவு ஒரே மாதிரியாக தான் உள்ளது(அவளுக்கு நான் என்றுமே குழந்தை தான் !!) ஆனால் என் அப்பாவுடனான பந்தம் பல்வேறு பரிமாணங்களை கண்டுள்ளது எனக்கே ஆச்சர்யமான ஒன்று- உங்கள் அப்பாவிடம் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக பேசிய ஒரு விசயத்தை மீண்டும் இன்று பேசுங்கள் நான் சொல்லும் உண்மையின் வீரியம்  புரியும். ஒரு பிள்ளையின் முதல் ஆசான்  அப்பா தான். என் கற்றல்கள் அனைத்தும் என் தந்தையின் மூலமாக தொடங்கியது தான்- கோலியில் ஆரம்பித்து பரோட்டா சாப்பிடுவது வரை என் அப்பாவிடம் கற்றது தான். என் மேல் நான் நம்பிக்கை வைக்க  தொடங்கிய தருணம் என் அப்பா என் மீது நம்பிக்கை கொண்டு சைக்கிள் சீட்டிலிருந்து கையெடுத்த அந்த அழகான நொடியில் தான் ! முதன் முறை எழவு பார்த்து நடுங்கியபோதும்,இறைச்சி கடையில் முதல் ரத்தம் பார்த்த போதும்,முதல் முறை அருவியின் வேகம் அறிந்த போதுமான  பொழுதுகளில் நான் கோழிகுஞ்சாய் சுருங்கி  பற்றியது என் அப்பாவின் விரல்களையே .2 ஆம் வகுப்பில் பம்பரம் கேட்ட போது எனகேன்றே ஆசாரியிடம் சொல்லி செய்த என் பெயர் பொறித்த பம்பரதுடன் என் அப்பாவை கட்டி கொண்ட பொழுதுகளும் ,நான் வேலை தேடி செல்லும் போது அப்பா  என் பைல் துடைத்து அடுக்கிய பொழுதுகளுமான  நினைவுகளும் ஏனோ  இதை எழுதும் போது நிரம்பி வழிகின்றது.  மகன்கள் அப்பாவிடம் முரண்படும் சமயம் அவர்கள் தனக்கென ஒரு அடையாளம் தேடும் போது தான் - அவர்களது 16 முதல் 20 வயது போது தன் தனித்துவத்தை நிருபிக்க பார்க்க முயன்று தான் தன் தந்தையின் நிழல் என்றுனறந்து  தோற்கும் போது வரும் கோபங்களே அந்த வயது முரண்களாக மாறுகின்றன. அதன் காரணமாய்   தான் அம்மா நெருங்கியவள் ஆகி விடுகிறாள் அப்பா பொல்லாதவர் ஆகிவிடுகிறார் !!!இதில் வேதனையான விஷயம் என்னவென்றால்   வயது கடந்த பின்பும் பலர் இந்த வட்டத்தை விட்டு வருவதே இல்லை- பின்னர் உணர நேரம் இராது ,இருக்கும் நொடியில் அப்பாவின்  உலகம் சென்று பாருங்கள் அன்று புரியும் அப்பாவின் உலகை தாங்கி சுற்றும் அச்சு நீங்கள் என்று.

2 comments:

  1. nice one da gautam...really superb............

    ReplyDelete
  2. //தாய்மையை கொண்டாடும் அளவு தந்தையின் உலகத்தை கொண்டாடுவதில்லை...நியமான எதிர்பார்ப்பு

    //கோழிகுஞ்சாய் சுருங்கி பற்றியது என் அப்பாவின் விரல்களையே...கோழிகுஞ்சாய் சுருங்கி பற்றியது என் அப்பாவின் விரல்களையே...really superb

    //ஏகலைவர்களாய் நாம் கற்று கொண்டது ஏராளம்...வெளிவராமல் புதைந்த உண்மை .... உண்மையில் அருமையான எழுத்து

    ReplyDelete