இன்றோடு நான் சென்னை வந்து ஒரு மாதம் ஆகிறது.நகரம் என்பது ஒரு ஓய்விலாத அரக்கன் போல , எவ்வளவு பேரை உண்டாலும் அதன் பசி ஓய்வதில்லை .
உணவு தேடி செல்லும் எறும்புக் கூட்டம் போல் மக்கள் எதையோ தேடி நகரம் நோக்கி வருகிறர்கள். சிலர் சாதிக்க வேண்டும் என்றும், சிலர் வறுமையை வெல்லவும் வந்தாலும், பலரை உந்தி தள்ளுவது அரை சாண் வயிறு தான். வயிற்று பிழைப்புக்காக நகரம் பெயர்பவர்கள் தான் அதிகம் என்பதே உண்மை. ஒரு நகரம் என்பது ஒரு இடம் என்பதை விட அது எனக்கு ஒரு கொதிநிலை யாகவே தோன்றுகிறது . எப்போதும் யாருக்கும் யார் மீது எரிச்சலும் கோபமும் புகைந்து கொண்டே இருக்கும் ஒரு மாறாத எரிகலனே நகரம் என்பது.காரில் போபவனுக்கு பைக்கில் போபவன் மீதும், நடப்பவனுக்கு நிற்காத பேருந்தின் மீதும், அடித்தட்டு மக்களுக்கு சாப்ட்வேர் நிறுவன இளைஞர்கள் மீதும் எப்போதும் ஒரு பெருங்கோபமும் எரிச்சலும் இருந்து கொண்டே தான் இருக்கிறது .அந்த கோபமும் முர்கமுமே மக்கள் பற்றிய அலட்சியத்தை உண்டாகுகிறது. ஒரு நகரம் என்பது கனவுகள் பலவற்றை தன்னுளே அடக்கிகொண்டு,திமிறும் குதிரையின் வேகத்தோடு நாள்தோறும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. இங்கு பேருந்தினுள் வியர்வை வாசனையும், அவசர துரிதங்களும்,தங்கள் பணத்தை பாதுகாப்பதுமே பிரதானம். நகரத்தில் மக்கள் வாழ்வதில்லை , மாறாக வேட்டையாடுகிறார்கள் தன் வாழ்க்கைக்காக ,வேறொருவன் தன் இடம் கொண்டு செல்ல கூடாது என்பதற்காகவும் வேட்டையாடுகிறார்கள் .தங்களை மிகபெரும் நாகரிக சமுதாயமாக காட்டிக்கொள்ள முற்படும் நகரத்தார்கு தாம் இன்னும் இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட வாழ்கை வாழ்வது புரிவதில்லை ! அன்று மிருகத்தை வேட்டையாடியவர்கள் இன்று சக மனிதரை வேட்டையாடுவதில் இன்பம் காண்கிறார்கள். ஆனால் , நாங்கள் முன்னேறியவர்கள் என்று வெட்கம் இல்லாமல் மார்நிமிர்த்தி பேசுகிறார்கள். நான் நேற்றிருந்ததை விட இன்று வளர வேண்டும் என்று நினைப்பதே வளர்ச்சி ஆனால் இங்கோ , அவன்/அவளை விட நான் பெரியவன் என்று நிருபித்தால் நான் திறமைசாலி !!!அழகை மனதில் பார்க்காமல் நிறத்திலும், பணத்திலும் பார்க்கும் ஒரு தட்டு மக்களும், தங்கள் வேர்களை விட முடியாமல் இந்த விளையாட்டிலும் கலக்கமுடியாமல் தவிக்கும் ஒரு தட்டு மக்களும் இது ஏதும் தெரியதாமல் இந்த கான்கிரிட் காட்டுக்குள் புதிதாய் நுழையும் மக்களையும் தினம் பார்த்து சிரிக்கிறான் நெரிசல் நகர அரசன் .