நான் இப்போதைக்கு வெட்டி ஆபிசர். பொழுது போகாமல் கல்லூரியில் தொடாத பாடபுத்தகத்தையே மீண்டும் படிக்குமளவு சும்மா இருக்கிறேன் என்றல் புரிந்து கொள்ளுங்கள் என் நிலைமையை !!! அப்படி ஒரு இனிய (???!!! ) தருணத்தில் என் வீட்டு பூட்டு கண்ணில் பட்டது . வீட்டில் உள்ள பூட்டுகளை உற்று பார்த்தபோது என் தொலைந்து போன சாவிகளின் நினைவு வந்தது. நினைவு தெரிந்தது முதல் இன்று வரை என்னால் சாவிகளை பத்திரமாக வைத்து கொள்ள முடியாது விளைவு, என் வீட்டில் இன்று வரை பல சாவி இல்லா பூட்டுகள் உண்டு.
அப்படி பட்ட பூட்டு ஒன்று இன்று என் கண்ணில் மாட்டி கொண்டது . பூட்டு என்று ஒன்று இருந்தால் , சாவி என்றும் ஒன்று இருத்தல் வேண்டுமே ? தொலைந்து போன அச்சாவி இன்று என்னவாய் போயிருக்கும் என எண்ணம் தோன்றியது. வீட்டின் ஏதோ ஒரு பரணிலோ ஒரு பெட்டியிலோ இருக்கலாம், இல்லை எனில் ஏதோ ஒரு சாலையில் மண்ணோடு ஒன்றாய் போயிருக்கலாம் ,அன்றி மழையில் பயணித்து ஏதோ ஒரு குட்டையிலும் இருக்கலாம். அந்த சாவி இல்லாததால் என் வீட்டு பூட்டு பயனற்று கிடக்கிறது ( எங்க வீட்டு பூட்டுக்கு எக்ஸ்ட்ரா சாவி கிடையாது -அதையும் நான் தான் தொலைத்தேன் !!! [:D]) பூட்டு சாவி என்பது நகைக்கும் பணத்துக்கும் மட்டுமே உரியது அன்று ! நம் மனதுக்கும் உண்டு !!!
என் தொலைந்து போன சாவியை போல நம் எல்லோர் மனதிலும் ஒரு தொலைக்கப்பட்ட சாவியும் அதனால் திறக்கப்படாத பூட்டும் உண்டு தானே? அந்த சாவிக்கு ஒரு உருவம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் வடிவம் அன்றி இராது. அந்த சாவி சொல்லாகவோ , ஒரு செய்கையாகவோ, ஒரு வலியாகவோ இருக்கலாம் .நான் ஒரு முறை பட்ட அவமானத்தினால் நான் என் பள்ளி வாழ்கையில் மேடைஏறியதே இல்லை (என் எட்டாம் வகுப்பு தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரை நான் ஒரே ஒரு முறை தான் மேடை ஏறிநியன் )என்னை பொறுத்த வரையில், ஒரு சொல்லோ,அவமானமோ அல்லது செயலோ நாம் கொண்ட உறவையோ, செய்த செயலையோ நம்மிடதேயிருந்து துண்டிக்க வைக்கிறது , அந்த சொல்லும் ,செயலும் அந்த உறவையும் செயலையும் பூட்டிவிடுகிறது. அந்த சொற்களின் அல்லது செயலின் வீரியத்தை பொறுத்தே அந்த பூட்டு திறப்பதும் அல்லது சாவி தொலைக்கபடுவதும் நடக்கிறது .நம் ஒவ்வோற்குள்ளும் இப்படி தொலைக்கப்பட்ட சாவிகள் எத்தனை? சாவி அற்ற பூட்டுகளாக நம்மில் தங்கியிருக்கும் வலிகள் தான் எத்தனை? சாவி இல்லாவிட்டாலும் என் வீட்டில் பூட்டுகளை யாரும் தூக்கி போடுவதில்லை , அவை பயன் தராது வெறும் சுமையே என்ற போதும் ,வலிதான் என்றாலும் நாம் பூட்டுகளையும் ,அந்த நினைவுகளையும் தூக்கி எறிய முடிவதில்லை . ஏன்? என்றாவது சாவி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலோ ?